Wednesday 24 April 2013

எந்த நாடும் தட்டிக் கேட்க முடியாது என்ற நினைப்பில் சிங்கள அரசு ஆடுகிறது: ராமதாஸ்


‘’இலங்கை வடக்கு மாநிலம் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்குட்பட்ட வடக்கு வலிகாமம், கிழக்கு வலிகாமம் ஆகிய பகுதிகளில் தமிழர்களுக்கு சொந்தமான 6400 ஏக்கர் நிலங்களை ராணுவ பயன்பாட்டிற்காக சிங்கள அரசு கையகப்படுத்தியிருக்கிறது.
இது கடுமையாக கண்டிக்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்கு சொந்தமான நிலங்களை சிங்களப்படையினர் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பது காலம் காலமாக நடை பெற்று வருகிறது. 1990களின் தொடக்கத்தில் யாழ்ப் பாணத்தின் வலிகாமம் பகுதிகள் சிங்களப்படையின் கட்டுப்பாட்டில் வந்த போது அங்குள்ள 6400 ஏக்கர் நிலங்களை இலங்கை படையினர் கைப்பற்றிக் கொண்டனர்.
இலங்கையில் போர் முடிவடைந்ததையடுத்து தமிழர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலங்கள் மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த நிலங்களை ராணுவத்துக்கே சொந்த மாக்கிக் கொள்வதற்கான உத்தரவை சிங்கள அரசு பிறப்பித்திருக்கிறது. இந்தப்பகுதியில் யாழ்ப்பாணம் மண்டலத்திற்கான ராணுவ தலைமை அலுவலகத்தைக் கட்ட இலங்கை அரசு திட்டமிட்டிருக்கிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களின் மற்ற பகுதிகளிலும் ராணுவமயமாக்கல் தொடர்கிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் மொத்தம் 18,880 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். 2009ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பிறகு தமிழர்களுக்கு சொந்தமான 7000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள நிலங்களை சிங்களப்படைகள் பறித்துக்கொண்டுள்ளன. இந்தப் பகுதிகளில் சிங்களப் படையினருக்கான முகாம்களும், சிங்கள மக்களுக்கான குடியிருப்புகளும் கட்டப்பட்டிருக்கின்றன.
தமிழர்கள் வழிபட்டு வந்த 2500 கோவில்களும், 400 கிறித்தவ தேவாலயங்களும் இடிக்கப்பட்டு, சிங்கள வழி பாட்டுத்தளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இலங்கையில் லட்சக் கணக்கான தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசு, இப்போது தமிழர்களின் கலாச்சார அடையாளங்களை அழித்தல், தமிழர்களின் சொந்த பூமியில் சிங்களர்களை அதிக அளவில் குடியேற்றி அவர்களை பெரும் பான்மையினராகவும், தமிழர்களை சிறுபான்மையினராகவும் காட்டுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது. இவை ஐக்கிய நாடுகள் அமைப்பின் விதிகளுக்கு எதிரானவை என்ற போதிலும் தங்களை எந்த நாடும் தட்டிக் கேட்க முடியாது என்ற எண்ணத்தில் சிங்கள அரசு இவ்வாறு செய்து வருகிறது.
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் வேர்களை அழிக்க வேண்டும் என்பது தான் சிங்கள அரசின் நோக்கமாகும். இலங்கைப் போர் முடி வடைந்த பின்னர் போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை அவர்களின் சொந்த ஊரில் குடியமர்த்துவதற்கு பதிலாக அவர்களிடம் உள்ள வீடுகளையும், நிலங்களையும் கைப்பற்றியதன் மூலம் அவர்களின் வாழ்வாதா ரங்களை சிங்கள அரசு பறித்திருக்கிறது. இது சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு எதிரானதாகும்.
எனவே, ஐக்கிய நாடுகள் அமைப்பும், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளும் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு ஈழத்தமிழர்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்டு, அவர்களிடமே ஒப்படைக்கவும், தமிழர்கள் வாழும் பகுதிகள் ராணுவமயமாக்கப் படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment